நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்குப் பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
இதனை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் கரத், பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஜனாதிபதி திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தனர். தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரத், “கொரோனா பரவலிலிருந்து, இந்திய நாடு மீண்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கும்போது, அனைத்து துறைகளும் முன்னேறி வருவதை பார்க்க முடிகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது பொருளாதாரம் நன்றாக உள்ளது. 2014ல் பிரதமர் பதவியேற்றபோது, பொருளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது. இன்று 5வது இடத்தில் உள்ளது.
இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சாமானிய மக்களுக்கு என்ன கிடைக்கும் என்பது 11 மணிக்கு தெரிந்துவிடும். அதுவரை நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.







