துபாய், சிங்கப்பூர், கொழும்பு, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து ஷு மற்றும் உள்ளாடைகளில் வைத்து கடத்தி வந்த 1 கோடியே 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ ,169 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாக்கா அதிகாரிகள், பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து 25 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 510 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.
இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னை வந்த பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்த சுங்க இலாக்கா அதிகாரிகள், அவரது கைப்பையில் இருந்து 7 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 550 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர் .
இதேபோல் சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த வாலிபரின் காலில் இருந்த ஷுவில் மறைத்து வைத்து கடத்தி வந்த 24 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 484 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதவிர கொழும்புவில் இருந்து வந்த வாலிபரின் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 31 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 625 கிராம் தங்கத்தை சுங்க இலாக்கா அதிகாரிகள் கைப்பற்றினர்.
இப்படி ஒரே நாளில் பெண் உள்பட 4 பேரிடம் இருந்து 1 கோடியே 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 169 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்ததோடு, 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் கடத்தலின் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பி. ஜேம்ஸ் லிசா










