ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போழுது எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளரை அறிவித்தார்.
அதன்படி அதிமுக வில் இபிஎஸ் அணியின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ வாக இருந்த கே.எஸ். தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசுவின் பெயர் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெறவில்லை. இதை வைத்துப் பார்க்கும்போது கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி அதிமுக சார்பில் தென்னரசு வேட்பாளராக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக கே.எஸ்.தென்னரசு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஈரோட்டில் ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்படலாம் என நியூஸ் 7 தமிழ் ஜனவரி 26ம் தேதியே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
– யாழன்