வீட்டுக்கதவை திறக்க முயன்று முடியாததால் அருகிலேயே படுத்து உறங்கிய கரடி – குன்னூரில் பரபரப்பு!

குன்னூரில் உள்ள குடியிருப்பில் ஒற்றை கரடி ஒன்று வீட்டின் கேட்டை திறக்க முயற்சி செய்து திறக்க முடியாததால் அங்கேயே படுத்து உறங்கி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர்…

குன்னூரில் உள்ள குடியிருப்பில் ஒற்றை கரடி ஒன்று வீட்டின் கேட்டை திறக்க முயற்சி செய்து திறக்க முடியாததால் அங்கேயே படுத்து உறங்கி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அண்மை காலமாக வன விலங்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு வந்து செல்வதால் அச்சம் அடைந்துள்ளனர். அந்த வகையில், கடந்த 2 நாட்களாக குன்னூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு, வனப்பகுதியில் இருந்து வந்து செல்லும் ஒற்றை கரடியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் குடியிருப்பு பகுதியில் நுழைந்த கரடி வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவை திறக்க நீண்ட நேரம் முயற்சி செய்தது. ஆனால் அதனை திறக்க முடியாததால் அதே இடத்தில் கரடி படுத்து உறங்கியது. பின்பு வாகன சத்தம் கேட்ட கரடி அங்கிருந்து சென்றது.

தொடர்ந்து குன்னூர் பகுதிகளில் கரடி வந்து செல்லும் சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.