ஜவுளி கடையில் துணி வாங்குவது போல் நடித்து திருடிய இரண்டு பெண்கள் கைது

அரியலூர் மாவட்டத்தில் ஜவுளி கடையில் துணி வாங்குவது போல் நடித்து சேலைகளை திருடிய பெண்களை சிசிடிவி காட்சிகள் மூலம் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் இவரது நண்பரும்…

அரியலூர் மாவட்டத்தில் ஜவுளி கடையில் துணி வாங்குவது போல் நடித்து சேலைகளை திருடிய பெண்களை சிசிடிவி காட்சிகள் மூலம் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் இவரது நண்பரும் சேர்ந்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். கடையில் இவரது மனைவி மேனகா என்பவரும் பணியாளர்கள் சிலரும் சேர்ந்து ஜவுளி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கமாக கடையில் ஜவுளி வாங்க வருபவர்களில் சிலர் கடையில் துணி வாங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தனர். விற்பனையாளர்கள் துணிகளை எடுத்து
காண்பித்துக் கொண்டிருந்தனர். ஐந்து பேர் சேர்ந்து வந்து துணியை பார்த்துவிட்டு ஒரே ஒரு சேலை மட்டும் வாங்கிச் சென்றனர். பின்னர் பணியாளர்கள் துணிகளை எடுத்து அடுக்கும் போது சில துணிகளை காணவில்லை.

இது குறித்து பணியாளர்கள் கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த உரிமையாளர் சிசிடிவி கேமரா பதிவை பார்த்தபோது, அதில் சிலர் சேர்ந்து பச்சை கலர் பையில் சேலையை எடுத்து மறைத்து வைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் மேனகா புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது கல்லாத்தூர் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அஞ்சம்மாள், ரமேஷ் மனைவி கல்பனா ஆகியோரை கைது செய்தனர். இவர்களுடன் வந்த மற்றவர்களை தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.