தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை-மத்திய இணை அமைச்சர்

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ள தொடங்கியுள்ளது. எழுத்துப்பூர்வமாக தேசிய கல்விக்…

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ள தொடங்கியுள்ளது. எழுத்துப்பூர்வமாக தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை.

வெறும் கல்வியறியும், உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையுமே ( GER ) தரத்தை தந்து விடாது. புரிந்துகொள்ளும் திறன், கற்றல் வெளிப்பாடு, வேலைவாய்ப்புக்கேற்ற படிப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் தான் உண்மையான தரத்தை வெளிக் கொணரும்
உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடத்தில் உள்ள நிலையில், மத்திய கல்வித் துறை இணையமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர் பேச்சுவார்த்தைகள், விவாதங்களின் மூலம் தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவோம். மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எந்த மொழியையும் தேசிய கல்விக்கொள்கை திணிக்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் உள்ளது.

மாநிலங்கள் அவரவர் விருப்பத்துக்கேற்ப கல்விக்கொள்கைகளை வடிவமைத்துக் கொள்கின்றன.

ஆனால் அது தரமானதா என்பதை ஆராய வேண்டும். தேசிய அளவில் ஒரு தரமான கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார் சுபாஸ் சர்க்கார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.