மதுரையில் களைகட்டிய நாட்டின நாய்கள் கண்காட்சியில் 250 மேற்பட்ட நாட்டின நாய்கள் பங்கேற்று அசத்தின.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தேசிய அளவிலான நாட்டின நாய் வளர்ப்பு கருத்தரங்கம் மற்றும் நாட்டின நாய்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் தேனி, திருச்சி, மதுரை ,திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டின வகையான சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் என நான்கு இனங்களைச் சேர்ந்த 270 நாய்கள் பங்கேற்றன. இந்த நாய்களுக்கு குட்டி நாய்கள், நடுத்தர நாய்கள், பெரிய நாய்கள் என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, அதில் ஆண் நாய்கள், பெண் நாய்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற நாய்களுக்கு சான்றிதழ்கள், ஷீல்டு வழங்கப்பட்டன. நாய்கள் கண்காட்சி குறித்து பேசிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வகுமார், “வெளிநாட்டு நாய் வளர்ப்புக்கு பொருளாதார செலவு அதிகம். ஆனால் நாட்டின நாய்கள் வளர்ப்பதற்கு பெரிய அளவில் பொருளாதார தேவை இல்லை. அதேபோல நாட்டின நாய்கள் பாதுகாப்பிற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்” என தெரிவித்தார்.







