திருவள்ளூர்: 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – ஒருவர் கைது!

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் பகுதியில் நேற்று மாலை வடமாநில தம்பதியின் 3 வயது குழந்தை காணாமல் போயுள்ளது. இதனையடுத்து காணாமல் போன குழந்தையை பெற்றோர், பொதுமக்கள் உதவியுடன் அந்த பகுதியில் தேடினர். அப்போது முட்புதரில் காயங்களுடன் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி என்பவரை போலீசார் கைது செய்தனர். பிபின் மஞ்சி உள்ளிட்ட 4 பேர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து அழைத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.