பாம்பை பிடித்து கடித்துக் கொன்ற நபர் உட்பட மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியை சேர்ந்தவர்மோகன். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 21 வயதான சூர்யா, சந்தோஷம் என்ற இரண்டு பேரை அழைத்துக்கொண்டு சென்று சின்ன கைனூர் ஏரிக்கரைப் பகுதியில் அமர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள். அப்போது, அங்கு அருகில் இருந்த தண்ணீரிலிருந்து நீந்தி கரைப்பகுதிக்கு வந்த பாம்பை ஒன்றை வெறும் கையாலேயே பிடித்த மோகன், அதை துன்புறுத்தி கொன்று பாம்பின் தலையையும், உடம்பையும் இருபாகங்களாக பற்களால் கடித்து துண்டாகி கீழே வீசினார். இதனை அருகில் இருந்த சூர்யா, சந்தோஷ் இருவரும் செல்போனில் வீடியோக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
பதிவிட்ட சில நிமிடங்களிலேயே வீடியோவானது வைரலான நிலையில், வனவிலங்குகளுக்கான குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வைல்ட் லைஃப் கிரைம் கண்ட்ரோல் (WCC) என்ற அமைப்பு, இதனைக் கண்டு ஆற்காடு வன சரக அலுவலர் சரவணன் பாபுவிடம் புகார் அளித்தனர். இதையடுத்து இச்சம்பவத்தில் சம்மந்தப்பட்ட 3 பேரையும் தேடி பிடித்து கைது செய்த ஆற்காடு வனத்துறையினர்,வனவிலங்குகளை துன்புறுத்துதல், வனவிலங்குகளுக்கு மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து , அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
- பி.ஜேம்ஸ் லிசா








