ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி குண்டம் திருவிழா கடந்த 16 தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து பத்திரகாளி அம்மனுக்கு 21 நாட்கள் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இதற்கிடையே விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றுது. இதில் கோயில் மிராசுதாரர் வகையராவை சேர்ந்தவர் முதலில் தீயில் இறங்கி திருவிழாவை தொடங்கி வைத்துள்ளனர். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தை சுற்றியுள்ள அந்தியூர், கோபி, பர்கூர் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் சேர்ந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓம் சக்தி , பராசக்தி என கோஷம் மிட்டு தீயில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
—கோ. சிவசங்கரன்







