கொரோனா தொற்றைத் தடுக்க தெளிவான தடுப்பூசி யுக்திகள் தேவை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மத்திய அரசின் மீது 14 அம்சங்களை கொண்ட குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதுகுறித்து பேசிய ப.சிதம்பரம், கொரோனா தொற்றால் இதுவரை ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 673 பேர் உயிரிழந்திருப்பதை சுட்டிக்காட்டினார். பல லட்சகணக்கானோர் கொரோனா தொற்றால் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மிகப் பெரிய பேரழிவைச் சமாளிப்பதில் மத்திய அரசின் சிந்தனையற்ற தன்மை மற்றும் ஆயத்தமற்ற தன்மையால் இந்த தேசம் மிகப்பெரிய விலையைக் கொடுத்திருக்கிறது என்றும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
பின்னர் பேசிய ராகுல் காந்தி, நமக்கு இப்போது மனித நேயமே தேவை என்று வலியுறுத்தினார். இந்த கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மக்களுக்கு வருவாய் ஆதாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதே போல ஒரு தெளிவான தடுப்பூசி யுக்தியும் நாட்டுக்குத் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். ஒரு பெரும் புயலின் போது எங்கே போவது என்று வழி தெரியாமல் நாம் இப்போது நடுக்கடலில் நிற்கின்றோம் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.







