பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் சார்பில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி நேற்று இரவு காணொலி காட்சி வாயிலாக அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அனுமதி பெற்ற மருத்துவத் தேவைக்கான ஆக்சிஜன் தயாரிப்பதற்கான ஆலைகள் தொடங்கும் பணிகளை விரைவு படுத்தும்படி உத்தரவிட்டார். மேலும், பொதுத்துறை மற்றும் தனியார் துறை என இந்தியாவின் முழு திறனையும் உபயோகித்து கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கும்பணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
கடந்த ஆண்டு இந்தியா, ஒருங்கிணைந்து கொரோனாவை எதிர்கொண்டது போல, மீண்டும் ஒருங்கிணைந்து கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திரமோடியுடனான ஆலோசனையின்போது, ஒரு லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், விரைவில் அவை மாநிலங்களுக்கு அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.







