ஈரோடு மாவட்டத்தில் நான்கு வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஜெகன், தமது பக்கத்து வீட்டைச் சேர்ந்த நான்கு வயது பெண் குழந்தையை விளையாடுவதற்காக தனது வீட்டிற்குள் அழைத்து வந்து, பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெகனை கைது செய்தனர்.இந்த வழக்கு மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில், குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஜெகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை, நிவாரணமாக, குழந்தையின் குடும்பத்திற்கு ஒரு மாத காலத்திற்குள் வழங்கக்கோரி நீதிபதி பரிந்துரை செய்தார்.







