தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மதுரை தெற்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் நிற்கும் துலாம் சரவணன் தான் வெற்றி பெற்றால் வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர்,100 நாட்கள் பயணமாக நிலவுக்கு அழைத்துச் செல்வேன் என தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசியுள்ளார்.
மதுரை தெற்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நிற்கும் துலாம் சரவணன் ஏழ்மையான நிலையில் தனது பெற்றோருடன் வசித்துவருகிறார். தற்போது தேர்தலில் போட்டியிடும் அவர் வேட்பாளருக்கான டெப்பாசிட் தொகையை செலுத்துவதற்குக்கூடத் தெரிந்தவர்களிடம் ரூ.20- ஆயிரம் கடன் வாங்கி செலுத்தியுள்ளார். அவருக்கு ‘குப்பை தொட்டியை’ சின்னமாக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
துலாம் சரவணன் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாகத் தான் வெற்றிபெற்றார் அனைவருக்கும் ஐபோன், நீச்சல்குளத்துடன் கூடிய மூன்று மாடி வீடு கட்டி தரப்படும், இல்லத்தரசிகளின் வீட்டு வேலையைச் சுமையைக் குறைக்க ரோபோட் வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும், தொகுதி குளிர்ச்சியாக இருக்க 300 அடி உயர செயற்கை பனிமலை உருவாக்கித் தருவேன் பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.

“அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிட்டு மக்களை ஏமாற்றிவருகிறார்கள். அதிலிருந்து மக்கள் விழிப்படையவே இதுபோன்ற செயல்படுத்தமுடியாத வாக்குறுதிகளை என் தேர்தல் பரப்புரையாக மேற்கொண்டுவருகிறேன். இலவச வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது என்பதே என் நோக்கம். மற்றவர்களைப்போல் என்னால் பணம் செலவு செய்துவெற்றிபெற முடியாது. ஆனால் நான் எந்த நோக்கத்திற்காக இதுபோன்ற வாக்குறுதிகள் அளித்தேனோ அதில் வெற்றிபெற்றுள்ளேன்” என்றார்.







