சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் “அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026” இன்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது ;
கடந்த ஆண்டு அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாட்டை நடத்தி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தோம். இன்றைக்கு அனைத்துலக வள்ளலார் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். வள்ளலாரை ஏன் நாம் உயர்த்திப் பிடிக்கிறோம் என்றால், “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று சொல்லி, உலகுக்கே ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார் அவர்கள்.
வள்ளலார் தமிழ்ச்சமூகத்தில் உதித்த புரட்சியாளர்; அவரைப் போற்ற வேண்டியது, தமிழ்நாட்டின் கடமை. என்னுடைய பேச்சுகளிலும், சமூக வலைத்தளப் பதிவுகளிலும் வள்ளலாரை நிறைய நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன். வள்ளலாரின் கோட்பாடுகளை மேற்கோள் காட்டுவது மட்டுமல்ல, அவற்றை செயல் வடிவத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த மாநாட்டிற்கு வந்துவிட்டு புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் சென்றால், எனக்கு திருப்தி இருக்காது. அதனால், ஏழு அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு – இந்த அனைத்துலக வள்ளலார் மாநாடு நடைபெற்றதை குறிக்கின்ற விதமாக இந்த பள்ளி வளாகத்தில், நினைவுத் தூண் அமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு – வடலூரில், சன்மார்க்க பயிற்சிப் பள்ளி ஏற்படுத்தப்படும். அந்தப் பள்ளியில் திருவருட்பா இசைப்பயிற்சியும் அளிக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு – வடலூரில், வள்ளலார் பெயரில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படும்.
நான்காவது அறிவிப்பு – ஸ்பிரிச்சுவல் அல்-கெமி என்ற வள்ளலார் புத்தகம் அறநிலையத் துறை பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு – வள்ளலார் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் மூன்று நாட்கள் விழா நடத்தப்படும்.
ஆறாவது அறிவிப்பு – மேட்டுக்குப்பம், மருதூர், கருங்குழி ஆகிய இடங்களில், ‘வள்ளலார் அன்னதான கூடங்கள்’ திறக்கப்படும்.
ஏழாவது அறிவிப்பு – கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்து வரும் பூங்காவுக்கு ‘வள்ளலார் பூங்கா’ என பெயர் சூட்டப்படும்.
வள்ளலாரைப் போற்றுவதோடு, நம்முடைய பணி நின்றுவிடக் கூடாது; அவருடைய நோக்கங்களை மக்கள் முழுமையாக உணர்ந்து, கடைப்பிடிக்க பாடுபட வேண்டும்! அதற்கு இந்த மாநாடு வழி வகுக்கவேண்டும்.
ஏனென்றால், நம்முடைய பண்பாட்டு அடையாளங்களுக்கு வேறு வர்ணம் பூச நினைக்கிறார்கள், வள்ளலாரின் நோக்கங்களை சிதைத்திட நாம் அனுமதிக்க கூடாது! பிரிவினைச் சக்திகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காமல், அன்பும் – பண்பும் – அறனும் – கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்! சமத்துவம் போற்றும் அன்பு வழியாம் வள்ளலார் நெறி எங்கெங்கும் பரவட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.







