சேலம் ஆத்தூர் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆனந்த ஜோதி’ படத்தில் வரும் பிரபலமான பாடலை பாடி அதிமுக அரசை விமர்சனம் செய்தார்.
சேலம் ஆத்தூர், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். ஆத்தூர் ராணிப்பேட்டை பிள்ளையார் திடலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பினார். மேலும், உலக முதலீட்டாளர் மாநாட்டில் 27 சதவீதம் மூதலீடு வந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்த பேசிய அவர், “உங்களில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். தமிழ் நாட்டிற்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிற ஆட்சிதான் மத்தியில் உள்ள பாஜக. அவர்களுடையை அடிமையின் ஆட்சி தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி. அப்போது திடீரென எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆனந்தஜோதி’ படத்தில் வரும் ‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற’ பாடலை பாடி தமிழகத்தில் இதுபோன்ற ஆட்சி தான் நடக்கிறது என விமர்சனம் செய்தார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாரும் கவலைப் பட வேண்டாம் உங்களுக்காக நான் இருக்கிறேன். ஆட்சிக்கு வந்த உடன் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.







