மத்திய அரசு கன்னியாகுமரியில் பன்னாட்டு சரக்கு பெட்டகம் மாற்று துறைமுகம் அமைக்கும் நடவடிக்கையை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிப்படக் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை இன்று மேற்கொண்டார். ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற பரப்புரையின்போது திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது, “மறைந்த எம்பி வசந்தகுமார் விட்டுச்சென்ற பணிகளைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே அவரது மகன் விஜய் வசந்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், குளச்சலில் வர்த்தக துறைமுகம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் பூங்கா, இந்து மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை என வாக்குறுதி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் எதையாவது நிறைவேற்றியுள்ளாரா எனக் கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மீனவர்களின் உரிமைகளை மீட்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவோம். அதிமுகவை சேர்ந்தவர்களைக் கன்னியாகுமரி மக்கள் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேர்ந்தெடுக்காத காரணத்தால்தான் அரசின் திட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வரவில்லை என முதலமைச்சர் கடந்த முறை நாகர்கோயில் வந்தபோது தேர்தல் பரப்புரையில் பேசியிருந்தார். இவ்வாறு ஒரு முதல்வர் பேசுவதை ஏற்றுக்கொள்ளமுடியுமா, முதல்வர் பழனிசாமியை தேர்ந்தெடுத்த எடப்பாடி தொகுதியிலேயே அவர் எதுவும் செய்தது கிடையாது எனக் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு கன்னியாகுமரியில் பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த திட்டத்தை திமுக ஒருபோதும் அனுமதிக்காது” என்று அவர் கூறினார்.







