திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று முதல் 9 நாட்களாக 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, நேற்று மாலை கோயிலில் ஆகம விதி களின்படி அங்குரார்ப்பணம் நடந்தது. அங்குரார்ப்பணத்தை முன்னிட்டு ஏழுமலையானின் சேனை முதல்வன், கோயிலில் இருந்து புறப்பட்டு மேற்கு மாட வீதியில் உள்ள வசந்த மண்டபத்தை அடைந்தார்.
அங்கு புற்றுமண் சேகரிக்கப்பட்ட நிலையில் சேனை முதல்வனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து புற்றுமண் கலசங்கள் மாடவீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தன. கோயிலில் உள்ள மண்டபத்தில் புற்று மண்ணை கொட்டி அதில் பூமாதேவி படத்தை கோயில் அர்சகர்கள் வரைந்தன . தொடர்ந்து பூமாதேவி படத்தின் வயிற்று பாகத்தில் இருந்து மண்ணை எடுத்து புதிய மண் கலசங்களில் போட்டு அவற்றில் நவதானியங்கள் தூவப்பட்டன.
அங்குரார்ப்பணத்தின் போது தூவப்பட்ட நவதானியங்கள் எந்த அளவிற்கு முளைக்கிறதோ அந்த அளவிற்கு நாட்டில் வளம் பெருகும் என்பது ஐதீகம். பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை முதல் வாகன புறப்பாடாக ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் நடைபெற உள்ளது. மேலும், அலிபிரி நுழைவு வாயில், சோதனைச் சாவடி, திருமலையில் ஏழுமலையான் முகப்பு கோபுரம் உட்பட முக்கிய இடங்கள் அனைத்தும் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் இன்று முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோல் திருப்பதி மலையில் இரண்டு முறை பிரமோற்சவங்கள் நடைபெறும். நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு கொடியேற்றம், கொடியிறக்கம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறாது.
நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு 3,054 போலீஸாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி எஸ்.பி.பரமேஸ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார். கருடசேவை 19-ம் தேதியும், தங்க தேரோட்டம் 22-ம் தேதியும், சக்கர ஸ்நானம் 23-ம் தேதியும் நடைபெறுகிறது. இதில் கருட சேவையான 19-ம் தேதி திருமலைக்கு பைக்குகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் 32 இடங்களில் 15,000 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.







