டாஸ்மார்க் கடையில் மது பாட்டில்களை இறக்கிக் கொண்டிருந்த லாரியிலிருந்து 48 மது பாட்டில்கள் அடங்கிய பெட்டியை இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மதுபான
மொத்த கிடங்கில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விற்பனைக்காக மதுபாட்டில்கள் லாரிகளில் கொண்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் மகாதானத் தெருவில் அரசுக்கு சொந்தமான 5646 எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடைக்கு நேற்று மாலை லாரியில் மது பாட்டில்கள்
வந்து இறங்கியது. அதனை ஊழியர்கள் டாஸ்மார்க் கடைக்கு எடுத்து சென்று
கொண்டிருந்தனர்.
அப்போது அதனை நோட்டமிட்டு கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் லாரியிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது 48 மது பாட்டில் அடங்கிய பெட்டியை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு கண்ணிமைக்கும் நொடியில் உயர்ரக இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
லாரியிலிருந்து ஊழியர் இறங்கி விரட்டி சென்றும் அந்த இளைஞர்களை பிடிக்க
முயற்சித்த போது திருடர்கள் வெகுதூரம் சென்று விட்டனர். திருடி சென்ற 48 மதுபாட்டில்கள் விலை 6140 ஆகும். இது குறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சுரேந்திரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார்
அளித்துள்ளார்.
மயிலாடுதுறை போலீசார் சிசிடிவி பதிவை வைத்து இளைஞர்களை தேடி வருகின்றனர். இளைஞர்கள் மது பாட்டில்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி
தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.







