’கருப்பு’ திரைப்படம் இன்று ரிலீஸ் ; படக்குழு அறிவிப்பு…!

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது

நடிகர் சூர்யா- ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள ’கருப்பு’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்து. மேலும் இப்படத்திற்கு தமிழ் நாடு அரசு சிறப்பு காட்சிக்கும் அனுமதி அளித்து இருந்தது.

ஆனால் பல்வேறு காரணங்களால் நேற்று கருப்பு திரைப்படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் நேற்று திட்டமிட்டபடி கருப்பு திரைப்படம் வெளியாகவில்லை.

பெரும் ஆவலோடு திரையரங்குகளுக்கு சென்ற சூர்யாவின் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனை பலர் சமூக வலைதளங்களிலும் கொட்டித் தீர்த்தனர். மேலும் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியும் படம் வெளியாகாதது குறித்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கருப்பு திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது :

காலத்தை மட்டுமல்ல, இதயத்தையே சோதிக்கும் சில பயணங்கள் உண்டு. ‘Karuppu’ படத்திற்காகக் காத்திருந்த, படம் குறித்துத் தொடர்ந்து விசாரித்துக்கொண்டிருந்த, எவ்விதத் தகவலும் இல்லாத மௌனமான காலங்களிலும், தாமதங்களின் போதும் எங்கள் மீது கொண்ட நம்பிக்கையைச் சிறிதும் தளரவிடாத ஒவ்வொருவருக்கும் — நாங்கள் எங்கள் மன்னிப்பையும், அதைவிட முக்கியமாக, எங்கள் ஆழ்ந்த நன்றியையும் சமர்ப்பிக்கிறோம்.

இந்தக் காத்திருப்பு வேதனையானதாக அமைந்தது என்பதை நாங்கள் அறிவோம். உங்களில் பலர் இந்தப் படத்தை மிகுந்த அன்போடும், பெரும் எதிர்பார்ப்போடும் நெஞ்சில் சுமந்திருந்தீர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். ஒவ்வொரு தாமதமும் எங்கள் மீதும் பெரும் சுமையாகவே அழுத்தியது. ஆனால், ஒவ்வொரு பின்னடைவின் போதும், உங்கள் ஆதரவும், உங்கள் செய்திகளும், உங்கள் நம்பிக்கையும், உங்கள் எல்லையற்ற அன்புமே இந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தன. இன்று, நிறைந்த இதயத்தோடும், நன்றிக் கண்ணீரோடும் நாங்கள் இறுதியாக அறிவிக்கிறோம்: #Karuppu திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது!

இந்தப் படம் எங்கள் ரத்தத்தையும், வியர்வையையும், உறக்கமற்ற இரவுகளையும், போராட்டங்களையும், உணர்வுகளையும் சுமந்து நிற்கிறது. இது இனி வெறும் எங்கள் கதை மட்டுமல்ல — இந்தப் பயணத்தில் எங்கள் தோள் கொடுத்து நின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமான கதை இது. காத்திருந்தமைக்கு நன்றி. நம்பிக்கை வைத்தமைக்கு நன்றி. திரையரங்குகளில் சந்திப்போம்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள் எக்ஸ் பதிவில் “அனைவருக்கும் வணக்கம்… எங்களுடன் இணைந்திருந்ததற்கு நன்றி. #Karuppu #VeeraBhadrudu — இன்றிலிருந்து!” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.