தமிழ்நாடு அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்து திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை வரும் ஜூன் 3ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு வருட காலம் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து திருவாரூர் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை வருகிற ஜூன் 20ம் தேதி பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைப்பார் எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பொறுப்பு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. துணை முதலமைச்சர் பதவிக்கு தற்போதைக்கு அவசரமில்லை என்றும் பின்னர் அப்பொறுப்பு குறித்து முடிவெடுக்கலாம் என்றும் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
தமிழினத்தின் மேன்மைக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்த மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாடி அவரது சாதனைச் சரித்திரத்தை இல்லம்தோறும் எடுத்துச் செல்வோம்! கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை அவர் புகழ் போற்றும் நிகழ்ச்சிகள் நடத்தி, புத்துணர்வு பெற்று, கழகத்தின் 75-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம்!” என தெரிவித்துள்ளார்.







