குடும்பத் தகராறில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் சிறையில் அடைக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த மாமியார் உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. இவரது மகள் விஜயலட்சுமி. இவருக்கும், புளுதிவாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலைக்கும் திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி ஏப்ரல் 12ம் தேதியன்று 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஊருக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். விஜயலட்சுமி எங்கே உள்ளார் என்பது தற்போதுவரை தெரியவில்லை.
ஏப்ரல் 13ம் தேதியன்று ஏழுமலை அதிக மதுபோதையில் மாமியார் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று தகராறு செய்தார். தகராறு முற்றியதில் மாமியார் முனியம்மாவை கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்து கொலை முயற்சி வழக்கில் ஏழுமலையை கைதுசெய்தனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த முனியம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றப்பட்டு ஏழுமலை கைதுசெய்யப்பட்டார்.








