இடைக்கால பட்ஜெட் ; பிற மாநிலங்கள் பின்பற்றுவதே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வெற்றி – அமைச்சர் தங்கம் தென்னரசு……!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பிற மாநிலங்கள் பின்பற்றுவதே இத்திட்டத்தின் வெற்றியாகும் என்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ஒவ்வோரு ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சட்டமன்றத் தோ்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்படுகிறது.

நிதியமைச்சர் பேசியதாவது ;

தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக ஏற்றுமதியை பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.  தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

மகளிர் நலன் காக்கும் திட்டங்கள்

“மகளிரின் உரிமையை பாதுகாத்திட அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்திட தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முத்தான திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இல்லங்களில் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களது வங்கிக்கணக்கில் ரூ. 1,000 செலுத்தும் இந்த திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக திகழ்கிறது. 1.31 கோடி மகளிர் பயன்பெறும் இந்த திட்டத்தை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்பதே இந்த திட்டத்தின் வெற்றியாகும். நாடே போற்றும் இந்த திட்டத்தில் எதிர்வரும் மாதங்களிலும் மகளிர் பயன்பெறும் வகையில் பிப்ரவரி மாதத்துடன் மார்ச், ஏப்ரல் மற்றும் கோடைக்கால தொகுப்பு என ரூ. 5,000 மகளிரின் வங்கிக்கணக்கில் செலுத்தியது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது. மக்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர்.

மகப்பேறு இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் உதவி செயலி அறிமுகம் செய்யப்பட்டது. ஆன்மிகத்தில் பெண்களுக்கு இடமளிக்கும் வகையில் பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

பெண்கள் பெயரில் சொத்துகளை பதிவு செய்தால் ரூ. 10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு பத்திரப்பதிவு கட்டணம் 1% குறைக்கப்படுகிறது. மகளிருக்கு மேலும் வாய்ப்பு வழங்கும் வகையில் மகளிருக்கு இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு மகளிர் நலனுக்கான அரசாக இந்த அரசு உள்ளது.

மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை பயணம் செய்து பெண்கள் பயனடைந்துள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் 6 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு, பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மகளிர் நலன் காக்கும் இந்த திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 6.95 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 5.40 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.