பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்க முடியாது:தேர்தல் ஆணையம்!

பாதுகாப்பு காரணங்களுக்காக பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி…

பாதுகாப்பு காரணங்களுக்காக பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக சார்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 15 ஆண்டுகள் பழமையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2017-ஆம் ஆண்டுக்கு பின்னர் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே தேர்தலில் பயன்படுத்தப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலுக்கு முன்பாகவே, வாக்கு இயந்திரங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு வாக்குப்பதிவில் திருத்தம் செய்ய முடியாது எனவும் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுக்கப்படும் மையங்களில் ஜாமர் பொருத்த வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ள தேர்தல் ஆணையம், இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் தீ விபத்தை தவிர்க்க மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

பதற்றமான தொகுதிகளை கண்டறிய மார்ச் 26 ஆம் தேதி முதல் 12 அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், பாதுகாப்பு காரணங்களுக்காக பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்க இயலாது என பதில்மனுவில் கூறியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சோதனை செய்யபட்ட பின்னரே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் என உறுதியளித்துள்ள தேர்தல் ஆணையம்,

44 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் இருந்து, வாக்குப்பதிவை நேரடியாக ஒலிபரப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக நடைபெறும் என நம்பிக்கை இருப்பதாக கூறி, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.