தமிழ்நாட்டில் கடந்த மாதம் (நவம்பர்) 4-ம் தேதி முதல் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 19) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இந்த பட்டியல் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாத நிலவரப்படி, 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், இந்த பட்டியலில் 5 கோடியே 45 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் தான் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, சுமார் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில், உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை (இன்று) மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பொருள்: வரைவு வாக்காளர் பட்டியல் (Draft Electoral Rolls- SIR 2026) சரிபார்த்தல் குறித்து”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







