அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
”சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார் , அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மதுபோதையில் வெறிபிடித்த கும்பல் ஒன்று கவுரவின் மனைவியை வன்கொடுமை செய்து கொன்றிருப்பதும், அதை தடுக்க வந்த கணவரை கொலை செய்திருப்பதும், அதனைத் தொடர்ந்து அவர்களது 2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் கொடூரத்தின் உச்சம்.
சில நாட்களுக்கு முன்பு தான் திருத்தணியில் மகாராஷ்டிரா மாநில இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேரலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது,”வந்தாரை வாழ வைக்கும்” தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
மனித குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், யாருக்கும் பாதுகாப்பற்ற, மோசமான ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசிற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை போல் வாய்ச்சவடால் பேசும் முதலமைச்சர் இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்…?. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.







