சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மதன்குமாரை கோவில்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் அருணாச்சலம் (45). இவர் கோவில்பட்டி – கடலையூர் நெடுஞ்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
அருகே ஒத்தக்கடை என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி
வருகிறார். இவரது கடைக்கு அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி மதன்குமார் என்பவர் உணவு அருந்துவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்து ரூ.700-க்கு சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலையில் அந்த ஹோட்டலுக்கு கஞ்சா போதையில் வந்த ரவுடி மதன்குமார், இரண்டு புரோட்டாவும் ஒரு ஆம்லேட்டும் பார்சல் தருமாறு கேட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர் அருணாசலம் பழைய பாக்கியான ரூ. 700யை கேட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2024 : கொல்கத்தா – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை!
இதையடுத்து, தான் புரோட்டா கேட்டு அந்த ஹோட்டல் உரிமையாளர் கொடுக்காததால் ரவுடி மதன்குமார் ஆத்திரமடைந்தார். ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராக்களை அடித்து சேதப்படுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்தார். பின்னர், ஹோட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தொடர்ந்து அவ்வழியாக சாலையில் சென்ற இருசக்கர வாகனங்களை மறித்து தகராறு செய்துள்ளார். ரவுடி மதன்குமார் அரிவாளுடன் தகராறு செய்து வருவதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த ரவுடி மதன்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

ஹோட்டல் உரிமையாளர் அருணாசலம் கொடுத்த புகாரின் பேரில் ரவுடி மதன்குமார் மீது
4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ரவுடி மதன்குமாரை கைது செய்தனர். இந்நிலையில், ரவுடி மதன்குமார் அரிவாளுடன் ஹோட்டலுக்குள் புகுந்து சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, ஹோட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தது அப்பகுதியில் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.








