“இனி யூ டியூபில் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட மாட்டேன்” – நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் உறுதி

இனி யூடியூபில் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிடமாட்டேன் என நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் கூறியதாக, சவுக்கு சங்கர் வழக்கறிஞர் விஜயராகவன் தெரிவித்தார். பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை…

இனி யூடியூபில் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிடமாட்டேன் என நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் கூறியதாக, சவுக்கு சங்கர் வழக்கறிஞர் விஜயராகவன் தெரிவித்தார்.

பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள்,  பெண் போலீசார் குறித்து
அவதூறாக பேசியதாக கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு,  5 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர்.  இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி கோதண்டராஜ் முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.  கிட்டத்தட்ட 4 மணி நேரம் சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.  பின்னர் போலீசார் பலத்த  பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை  கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் வழக்கறிஞர் விஜயராகவன்
பேசியதாவது,

“சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பாலமுருகன்
என்பவர் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில்,  சவுக்கு சங்கருக்கு வரும் 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

10 நபர்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிபதி இடம் தெரிவித்திருக்கிறார்.  இனிமேல் யூடியூப்பில் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என நீதிபதியிடம் சவுக்கு சங்கர் கூறினார்.  யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட மாட்டேன் எனவும் நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

ஜாமீன் மனு மீதான தேதி இன்னும் குறிப்பிடாமல் உள்ளது. ஏற்கனவே அவரை கோயம்புத்தூர் சிறையில் கொடுரமாக தாக்கி உள்ள நிலையில் மீண்டும் அவரை அங்கே
கொண்டு செல்கின்றனர்” என தெரிவித்தார்.

சவுக்கு சங்கரை நீதிமன்றம் அழைத்து வரும்பொழுதும்,  அழைத்துச் செல்லும் பொழுதும் ஏராளமான பெண்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியும்,  கையில் துடைப்பத்தை வைத்தும் செருப்புக்களை வைத்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.  அதே போல நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் அவரை வெளியே அழைத்து வரும் பொழுது நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களும் அவரது வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பினர்.

இதனிடையே,  சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள சவுக்கு சங்கரின் இல்லம் மற்றும் சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்ட பழனிச்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டதும்,  சவுக்கு சங்கர் வீட்டிற்கு போலீசார் சீல் வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.