அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும்-அமைச்சர் பொன்முடி

உண்மையான அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை…

உண்மையான அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை இந்தளவிற்கு தாமதப்படுத்துவது வருத்தத்திற்குரியது. ரிசல்ட் ஜூலை 15 ஆம் தேதிக்குள் என கூறியிருந்தனர். இப்போது ஆகஸ்ட் 15 என கூறியுள்ளனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதமாக வருவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதற்குதான் கல்வியெல்லாம் அங்கங்கு இருக்க வேண்டும்.

இந்த மாதத்திற்குள் சிபிஎஸ்இ ரிசல்ட் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே பல்வேறு மாநிலங்களாக பிளவுபட்டிருந்தது.
நம்மைப் பொருத்தவரை, இன, மொழி ரீதியாக வேறுபாடு இல்லாமல் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில், தமிழ்நாட்டில் இப்போது என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையே சொல்ல வேண்டும். தமிழ்நாட்டிற்கென கல்விக் கொள்கைக்காக மாணவர்கள், பெற்றோர்கள் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

மாணவர்களிடம் அதையெல்லாம் பேச வேண்டியதில்லை. மாநில அரசின் முடிவுகளை செயல்படுத்துபவராக ஆளுநர் இருக்க வேண்டும். நேற்று மத்திய இணை அமைச்சர் முருகன் பேசும்போது தாய்மொழிக்கு முக்கியத்துவம் என்கிறார். ஆனால், மும்மொழிக் கொள்கையைத் தான் வலியுறுத்துகிறார்கள். இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

நாங்கள் இருமொழித் திட்டத்தையே வலியுறுத்துகிறோம். மாணவர்கள் வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும் என நான் முதல்வன் திட்டத்தைத்தான் மத்திய இணை அமைச்சர் முருகன் கூறியுள்ளார். அவருக்கு நன்றி. ஜூலை 18 ஆம் தேதி கல்லூரிகளில் 2 ஆம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு வகுப்புகள் எல்லாம் தொடங்கப்படும்.

அரசுப்பணிகள் தேர்வு தமிழில் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளவர் முதலமைச்சர். அதுதான் திராவிட மாடல். கல்வித் திட்டத்தில் மாற்றம் இருந்தால் தமிழ்நாட்டிற்கென கல்விக் கொள்கை வகுக்கும் குழுவிடம் ஆளுநர் தெரிவிக்கலாம்.

ஒரு மாநிலத்தின் ஆளுநர்கள் எப்படி இருக்க வேண்டும்? மாநிலத்தின் அமைச்சரவைதான் அரசியல் அமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாநிலத்தின் சட்டத் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதையே பார்க்க வேண்டும். செயல்பாடுகளை பார்ப்பதற்காக நியமனம் செய்யப்பட்டவரே ஆளுநர்.

உண்மையான அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும். வேறு எந்த வேறுபடுத்தும் கருத்தும் இல்லை. பட்டமளிப்பு விழா எப்படி நடத்த வேண்டும் என வழிமுறைகள் உள்ளது. முறையையே மீறி இருக்கிறார்கள். உயர் கல்வித் துறை அமைச்சருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ஏன் கொடுக்கவில்லை என்பதைத்தான் கேட்கிறோம்.

பட்டமளிப்பு விழாக்கள் குறித்து துணை வேந்தர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆளுநர் இதேபோல செயல்பட்டால், காலத்திற்கேற்ப முடிவுகள் எடுக்கப்படும்.
கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் தமிழ் படிக்க வேண்டும் என்ற விதியை  அமைச்சர் முருகன் அமல்படுத்தினால் வரவேற்கிறோம் என்றார் பொன்முடி.

முன்னதாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.