நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் – புதிய பட்டியல்

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் குறித்த புதிய பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்துள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் திங்கள் கிழமை தொடங்க இருக்கிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத…

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் குறித்த புதிய பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்துள்ளன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் திங்கள் கிழமை தொடங்க இருக்கிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத தகாத வார்த்தைகள் குறித்த புதிய பட்டியலை நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ளது.

அதில், அனார்க்கி, சகுனி, டிக்டோரியல், தானாஷா, தானாஷஹி, வினாஷ் புருஷ், காலிஸ்தானி, கூன் சே கேட்டி, ஜெய்சந்த், கோவிட் ஸ்பிரெட்டர், ஸ்னூப்கேட், ஜூம்லாஜீவி, பால் புத்தி, அஷேம்டு, அப்யூஸ்டு, பெட்ரேயெட், கரப்ட், ட்ராமா, ஹிபோகிரைசி, இன்காம்பிடென்ட் உள்ளிட்ட வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற செயலகத்தின் இந்த புதிய பட்டியல், எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, புதிய இந்தியாவுக்கான புதிய அகராதி இது என கேலி செய்துள்ளார்.

இந்த வார்த்தைகள் தடை செய்யப்பட்டாலும் நாடாளுமன்றத்தில் தான் பேசப் போவதாக தெரிவித்துள்ள மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரேக் ஓ ப்ரீன், முடிந்தால் இடைநீக்கம் செய்யுங்கள் என சவால் விடுத்துள்ளார். அப்போதும் ஜனநாயகத்துக்காக போராடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடி அரசின் செயல்பாடு குறித்து தெரிவிக்கவே எதிர்க்கட்சிகள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன என தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், இவை தகாத வார்த்தைகள் என்றால் அடுத்தது என்ன விஸ்வ குரு என கேலியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சியை விமர்சிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை தடை செய்வதுதான் ஜனநாயகமா என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.