ஒரு பக்கம் பட்டமளிப்பு விழா, மறுபக்கம் ஆளுநருக்கு எதிரான போராட்டம் என்று
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு இன்று தமிழக ஆளுநர்
ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றுள்ளார். இந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு இதுவரை இல்லாத நடைமுறையாக சிறப்பு
விருந்தினராக மத்திய அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தது சர்ச்சையை
ஏற்படுத்திய நிலையில், தங்களை ஆலோசிக்காமலே பட்டமளிப்பு விழா நடைபெறுவதாகக் கூறி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விழாவைப் புறக்கணித்தார்.
இந்நிலையில், தமிழக ஆளுநர்களின் தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்புத்
தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முன்பாக சமூக நீதி மாணவர் இயக்கம்,
இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருப்புக் கொடி ஏந்தி
போராட்டம் நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மதுரை மாநகரில் பல்வேறு அமைப்பினரும் ஆளுநரின் நடவடிக்கைகளைக் கண்டித்து ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட நிலையில் விழாவானது காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளுக்குப் பின்னரே விழாவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதன்முறையாக மத்திய
அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளதும், தமிழக அமைச்சர்கள் புறக்கணித்த
சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதன் காரணமாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
-ம.பவித்ரா








