டெல்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள், கலவரமாக மாறின. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கலவரத்தில் 53 போ் உயிரிழந்தனா். மேலும்700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தக் கலவர வழக்கில் ஜேஎன்யு முன்னாள் மாணவா்கள் ஷா்ஜீல் இமாம், உமா் காலித் உள்பட 15 போ் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். அவா்களுக்கு ஜாமீன் வழங்குவது தொடா்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிச.10-ஆம் தேதி தீா்ப்பை ஒத்திவைத்தது. இதையடுத்து, இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று தீா்ப்பளித்துள்ளது.
அந்த தீர்ப்பில், ”நீண்டகால சிறைவாசத்திற்கான நிவாரணமாக ஜாமின் என்பது கோரிக்கையாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில், ஜாமின் கோரும்போது தாமதம் என்பது ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படாது என்று தெரிவித்த உச்ச நீதிபதிகள் உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாம் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் இவர்களை தவிர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும், தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு உள்ளதாக கருதப்படுவதால் ஒவ்வொருவரின் மனுவை தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டும். உமர் காலித், சார்ஜில் இமாம் ஆகியோர் வழக்குகளை தனியாக பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







