”மாற்றுத்திறனாளி மகனுடன் போராடும் எங்களை அரசு கண்டுகொள்ளவில்லை”

பேருந்து நடத்துனர் நடுவழியில் இறக்கிவிட்டதால் மூளை வளர்ச்சி குன்றிய 16 வயது மகனை ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மனு அளித்த துயரசம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி…

பேருந்து நடத்துனர் நடுவழியில் இறக்கிவிட்டதால் மூளை வளர்ச்சி குன்றிய 16 வயது மகனை ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மனு அளித்த துயரசம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி அடுத்த தேகேப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஆட்டோ டிரைவரான இவர் தனது மனைவி வாணிஸ்ரீ மற்றும் மூளைவளர்ச்சியற்ற, தனது 16 வயது மகன் ஹரிபிரசாத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க கிருஷ்ணகிரிக்கு பஸ்சில் வந்துள்ளார்.


அப்போது இவர்களை பேருந்து நடத்துனர் இந்த பேருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லாது கீழே இறங்குங்கள் எனக்கூறி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார். இதையடுத்து மூளைவளர்ச்சியற்ற தன், 16 வயது மாற்றுத்திறனாளி மகனை ஒன்றரை கி.மீ., தூரம் சிரமப்பட்டு தூக்கி வந்து கோபாலகிருஷ்ணன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இது குறித்து வேதனையுடன் தெரிவித்த கோபாலகிருஷ்ணன், நான் குடும்பத்துடன் ஓசூரில் வசித்து வருகிறேன். எனது மகனுக்கு பிறப்பிலிருந்தே மூளை வளர்ச்சி கிடையாது. மாற்றுத்திறனாளியான அவனுக்கு வலிப்பு நோயும் உள்ளது. இந்நிலையில் என் மகனுக்கு மாற்றுத்திறனாளி நிதியுதவி மற்றும் பட்டா பிரச்னை தொடர்பாக கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க ஓசூரில் இருந்து தர்மபுரி செல்லும் அரசு பஸ்சில் (TN29 2720) ஏறினேன். அப்போது நடத்துனரிடம் கலெக்டர் அலுவலகம் எனக்கூறி ஏறியபோதும் கிருஷ்ணகிரி நெருங்கியவுடன் ‘பஸ் கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லாது மேம்பாலத்தில் ஏறி செல்வதால் நீங்கள் கீழே இறங்குங்கள்’ எனக்கூறி நடத்துனர் தரக்குறைவாக பேசினார்.

மாற்றுத்திறனாளி மகனை தூக்கி செல்வதில் சிரமம் இருக்கும் எனக்கூறியும் அவர் நடுவழியில் இறக்கி சென்றுவிட்டார். ஏற்கனவே, 3 வருட பட்டா பிரச்னை, மாற்றுத்திறனாளி மகனுடன் போராடும் எங்களை அரசு உட்பட யாரும் கண்டு கொள்ளவில்லை என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.