சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தில் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய், முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது ,
எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தபோது அவரை அரசியல் அரிச்சுவடி தெரியாதவர், அட்டை கத்தி என்று விமர்சித்தனர். அவர்கள் தான், இன்றைக்கு நம்மை பற்றியிம் விமர்சிக்கின்றனர். இவர் பேட்டி கொடுக்கமாட்டார். வெளியிலேயே வரமாட்டார். டெல்லியில் இருந்து அவருக்கு அழுத்தம் வருகிறது என்று சொல்கிறார்கள். டெக்னாலஜி எங்கேயோ போகுது. உங்கள் டெக்னிக்கையாவது மாற்றுங்கள்.
இப்போது, மும்முனை போட்டி, நான்குமுனை போட்டி என்கிறார்கள். மக்கள் சக்தியுடன் நாம் ஒரு பக்கம். திமுக ஒரு பக்கம். பாஜக தலைமையில் மற்றும் பலர். இப்படி எத்தனை சக்திகள் வந்தாலும், திமுக-வை வீழ்த்த தவெக-வால் தான் முடியும். விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கின்றனர். தேர்தலில் ஒவ்வொரு வீட்டில் இருந்து ஒரு விஜய் வாக்களிப்பர். அன்று தெரியும் ஏன் விஜய்யை அழைத்தோம் என நீங்கள் வருத்தப்படுவீர்கள்.
கருத்து கணிப்பு என்று வெளியிடுகிறார்கள். சிலர் உண்மையாகவும், சிலர் கடுப்பிலும் வெளியிடுகின்றனர். கடுப்பில் வெளியிடுபவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். வீடுவீடாக சென்று பாருங்கள், வீட்டுக்கு வீடு தவெக இருக்கும். எனவே, முதலில் இருந்து கருத்து கணிப்பை தொடங்குங்கள். கட்சித் தொண்டர்கள், அமைச்சர்களின் அட்ராசிட்டியை பார்த்து தூக்கம் வரவில்லை என முதல்வர் கூறியிருக்கிறார். விசில் சின்னத்துக்குதான் வாக்களிப்பேன் என தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டால் கூட முதலமைச்சரே கூறுவார்.
நகர்ப்புறங்களில்தான் தவெகவுக்கு செல்வாக்கு இருக்கிறது. கிராமப்புறங்களில் இல்லை என்று கூறுகிறார்கள். விசில் சின்னம் ஊதாத ஊரே இல்லை. தமிழ்நாட்டின் அரசியலில் இருந்து தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓட வேண்டும். தவெக ஆளுங்கட்சியாக எழும். உங்களுடன் நான் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.







