டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மணிஷ் சிசோடியா மாதுபான உரிம ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நிலையில் கெஜ்ரிவால் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் மதுபான உரிமங்களை வழங்கியது மற்றும் கலால் வரி விதிப்பில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அத்துறையின் அமைச்சரும் டெல்லி துணை முதலமைச்சருமான மணிஷ் சிசோடியா தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
டெல்லி மதுபான உரிம விவகாரத்தில் மணிஷ் சிசோடியா மீதும், ஆம் ஆத்மி மீதும் கடுமையான விமர்சனங்களை பாஜகவினர் முன்வைத்து வருகின்றனர். அவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா மீதான ஊழல் புகார்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். டெல்லி அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த சிசோடியா மேற்கொண்ட முயற்சிகளை புகழ்ந்துரைத்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், கல்வியில் டெல்லியின் மாடலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெகுவாக பாராட்டியுள்ளதாகக் கூறினார். இந்த கல்விச் சேவைக்காக மத்திய அரசு மணிஷ் சிசோடியாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
ஆனால் குஜராத் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மணிஷ் சிசோடியாவை கைது செய்ய மத்திய பாஜக அரசு முயல்வதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். தாமே கைது செய்யப்பட்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.







