கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும்: உயர்நீமன்றம் உத்தரவு!

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 32 பேரின் குடும்பங்களுக்கு இன்று மாலை முதலமைச்சர் விஜய் அரசு பணி வழங்க உள்ளார். இந்த நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு பணி வழங்க தடைக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இறந்து போனவர்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை வழங்குவதால் என்ன தவறு? பொருளாதார உதவி தேவை தானே? என கேள்வி எழுப்பினார்.

அரசுத் தரப்பில், “வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது. உச்சநீதிமன்றம் விசாரணை கண்காணித்து வருகிறது .இன்று மாலை பணி நியமனம் வழங்கவுள்ள நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில்,” இதற்கு முன்பாக கும்பகோணம் மகாமகம் சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம் ஆகிய நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவில்லை. கருணை அடிப்படை பணிக்கான விதிகளை பின்பற்ற வேண்டும். அல்லது புதிய விதிகளை உருவாக்க வேண்டும்” என கூறினார்.

அதனைத்தொடர்ந்து நீதிபதிகள், “அரசு பணி வழங்குவது குறித்து சட்டமன்றத்தில் ஏதேனும் அறிவிப்பு வெளியிடப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில், “முந்தைய அரசு உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கியது. தற்போதைய அரசு அரசுப்பணியை வழங்குகிறது என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், “இது அரசியல் மேடை அல்ல, நீதிமன்றம். கவனமாக பேசுங்கள்” என எச்சரித்தனர். தொடர்ந்து, “தற்போதைய அரசு கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கருணை அடிப்படையிலான பணியை வழங்க திட்டமிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இது போன்ற வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அரசின் கொள்கை தொடர்பான முடிவில் தலையிட விரும்பவில்லை. இன்று நிகழ்வு நடைபெறலாம். ஆனால் இந்த விவகாரத்தில், நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் வரை தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும். ஜூலை 21 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடும்.

இந்த வழக்கில் TNPSC- யை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் சேர்க்கிறது எனக் குறிப்பிட்டு, CBI-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.