ஒளிப்பதிவாளர் இரா.செழியன் காலமானார்..!

திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் இன்று காலை உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.

திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் இன்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 57. அவரது உடல் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இரா.செழியன் தமிழ்நாட்டின் சிவகங்கையில் பிறந்த முன்னணி ஒளிப்பதிவாளர், தேசிய விருது பெற்ற இயக்குநர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். கட்டடப் பொறியியல் படிப்பை முடித்த இவர், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராகத் தன் சினிமா பயணத்தைத் தொடங்கினார்.

பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ (2007) திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தென்மேற்குப் பருவக்காற்று, பரதேசி, தாரை தப்பட்டை, ஜோக்கர், கொன்றால் பாவம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். ‘டூலெட்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 65-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. மிலன் சர்வதேச திரைப்பட விழாவில் இதற்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் கிடைத்தது.

அப்துல் கலாம் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரைப் பற்றிய ஆவணப்படங்களையும் தயாரித்துள்ளார். ஆனந்த விகடன் இதழில் உலகத் திரைப்படங்கள் குறித்து இவர் எழுதிய தொடர், பின்னர் ‘உலக சினிமா’ என்ற பபுத்தகத் தொகுப்பாக வெளியானது. இது தவிர ‘கார்மோனியம்’ என்ற சிறுகதைக்காக கதா விருதும் பெற்றுள்ளார்.


தி ஃபிலிம் ஸ்கூல் : புதிய தலைமுறை சினிமா ஆர்வலர்களுக்காகத் திரைப்படப் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இப்பள்ளியின் மூலம் பயின்ற 34 மாணவர்கள் ஒரே நேரத்தில் 34 சுயாதீனத் திரைப்படங்களை இயக்கும் புதிய முயற்சியை சமீபத்தில் தொடங்கினார். தமிழ் சினிமாவின் அறிவுசார் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவர். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

மறைந்த ஒளிப்பதிவாளர் செழியன் இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. அவரது உடல் சென்னை போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.