தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலமாக வந்தடைந்த அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் சென்றார்.
கரூரில் முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் பணி ஆணையை இன்று வழங்குகிறார்.
இந்த நிலையில் அரசு வேலை பெறுவோரின் விவரம் வெளியாகியுள்ளது. அதன் படி, மொத்தம் 31 பேருக்கு இரவு காவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் வழங்கப்படுகிறது. மேலும் ஒருவருக்கு ரூ. 10 இலட்சம் கருணைத்தொகையும் அளிக்கப்படுகிறது.


கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.




