கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “கோவை, திருப்பூர் நகரம் என்றால் என்ன என்பது நமக்கு தெரியும். ஆனால் சிலர் புதிதாக மஞ்சள் நகரம் என்று கூறுகிறார்கள். பாஜக, அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது. ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பூரண சந்திரன் அந்த தீயை அவர் உடலில் ஏற்றி கொண்டுள்ளார். அவரது இறப்பிற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.
துப்புரவு தொழிலாளிகளை கைது செய்கிறார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி மீதே குற்றம் சாட்டுகிறார்கள்.
திருப்பரங்குன்றம் தூண் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறுகிறார்கள். 2026ல் ஸ்டாலின் அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். திருப்பரங்குன்றம் மத பிரச்சனை இல்லை, ஈகோ பிரச்சனை. மனைவி சொல்வதை கேட்கிறேன் என்று முதலமைச்சர் கூறுகிறார். உங்கள் மனைவி கோவிலுக்கு செல்ல கூறவில்லையா, களத்தில் இல்லாதவர்கள் பற்றி பேச வேண்டியது இல்லை என்று விஜய் அவரையே கூறுகிறாரோ?
அவர் தான் களத்தில் அடிக்கடி இல்லை. மஞ்சள் நகரம் என்ற ஒன்றை விஜய் கண்டு பிடித்துள்ளார், ஆனால் மஞ்சளுக்கு வாரியம் அமைத்துள்ளது மத்திய அரசு. மஞ்சள் நகரத்தில் உள்ளவர்கள் பாஜகவிற்கு ஓட்டு போட வேண்டும். 10 வயதில் இருந்தே மக்களுடன் இணைப்பில் விஜய் இருக்கிறார் என்றால் 25 வருடங்களுக்கும் மேலாக மக்கள் சேவை செய்யும் எங்களுக்கு எந்த அளவு இணைப்பு இருக்கும்.
மகாத்மா காந்தியை இவர்கள்(திமுக) கொண்டாடவில்லை. அறிவாலயத்தில் தேசிய கொடி கூட ஏற்றாமல் இருந்தார்கள். மகாத்மா காந்தி ஊழல் அற்றவர், ஆனால் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் நடந்தது தமிழ்நாட்டில் தான். காந்திக்கும் உங்களுக்கும்(காங்கிரஸ்) சம்பந்தமே இல்லை. முற்போக்கு இயக்கங்கள் என்ற பெயரையே மாற்ற கூறுங்கள். அவர்கள் பிற்போக்கு இயக்கங்கள். சரஸ்வதி நாகரிகம் என்பது வரலாற்றில் உள்ளது. அதிமுக அமைச்சர்கள் பாஜக தலைவர்களை பார்ப்பது என்றால் நட்பு, பிரச்சனை இல்லை.
உதயநிதிக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா என்று தெரியவில்லை, எழுதி தருபவர்கள் எதுகைமோனையுடன் எழுதி கொடுக்கிறார்கள். கருணாநிதி பெயர் அனைத்திற்கும் வைத்து விட்டார்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை வைக்கலாமே? தீயசக்தி திமுக என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள். நான் அனைத்து மதத்திற்கும் ஆதரவாக பேசுவேன். ஆனால் நீங்கள்(திமுக) பைபிலை பாராட்டி விட்டு பகவத் கீதையை எதிர்க்கிறீர்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.







