“பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது மகிழ்ச்சி” – பியூஷ் கோயல்!

டிடிவி தினகரனின் வருகை தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தி உள்ளது என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி), தமாக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் அதிமுக – பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் நேரில் சந்தித்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது மகிழ்ச்சி. ஊழல் நிறைந்த திமுகவை தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. திமுகவின் ஊழல்கள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும்.

தமிழ் கலாசாரம் மக்களுக்கு எதிராக திமுக உள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான நல்லாட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கும். டிடிவி தினகரனின் வருகை தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.