குடியரசு தினத்தன்றும் மது விற்பனை செய்த திமுக அரசு – நயினார் நாகேந்திரன்……….!

திமுக அரசானது குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் ,

குடியரசு தின விழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு, ஜனவரி 25-ஆம் தேதியே ₹220 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மதுவை விற்றதோடு நில்லாமல், ஜனவரி 26-ஆம் தேதியும் சட்டவிரோதமாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்துள்ளது திமுக அரசு.

கள்ளச் சாராயம் குடித்து பலர் பலியாவது ஒருபுறம் இருக்கையில், டாஸ்மாக் மதுவைக் குடித்து இறந்த சம்பவங்களும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்நிலையில், கள்ளச் சந்தையில் மறைமுகமாக விற்கும் இத்தகைய மதுபானங்களைக் குடித்து, ஏதாவது உயிர் பலி ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?

பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் விற்று திமுக அரசின் கஜானாவை நிரப்பியது போதாதென்று, தற்போது தேர்தல் கைச்செலவுக்கு கல்லா கட்ட விடுமுறை நாட்களிலும் முறைகேடாக மதுவை விற்று, தமிழகப் பெண்களின் தாலி அறுக்கப் பார்ப்பது முறையா முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே…….?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.