அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியமாகும். இருதரப்பிற்கும் இடையேயான வெளிப்படையான வர்த்தகம் தொடர்பாக நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இதற்கிடையில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் அடங்கிய குழு இன்று மதியம் இந்தியக் குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டது.
இந்த ஆலோசனையின் முடிவில், ’அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்னும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக இணைந்து அறிவித்துள்ளது.
இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் 96.6% சரக்கு ஏற்றுமதிகளுக்கான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும். இதன்மூலம் இந்தியாவுக்கான ஏற்றுமதி 2032-ல் இரு மடங்காக அதிகரிக்கும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. இதற்கு இணையாக, ஐயோப்பிய சந்தைககளில் இந்திய ஏற்றுமதிகளுக்கான இடம் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் ஐரோப்பிய யூனியன் உறுதி அளித்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதில், “இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே இன்று கையெழுத்தான இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், நமது உறவில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
இதைச் சாத்தியமாக்குவதற்காக, கடந்த ஆண்டுகளில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்ட ஐரோப்பாவின் அனைத்துத் தலைவர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த ஒப்பந்தம் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும், அனைத்து மக்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும், மேலும் வளமான எதிர்காலத்தை நோக்கிய இந்தியா-ஐரோப்பிய கூட்டாண்மையை உறுதிப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.








