தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் டிசம்பர் 3ஆம் தேதி புயல் உருவாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் டிசம்பர் 2…

தமிழ்நாட்டில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் டிசம்பர் 3ஆம் தேதி புயல் உருவாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல்  5ஆம் தேதி வரை மிக கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: 

வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதி கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதனை தொடர்ந்து,  தமிழ்நாட்டில் அதி கனமழை காரணமாக  டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 5 தேதி வரை ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் 12 சென்டிமீட்டரில் இருந்து 20 சென்டிமீட்டர் வரை மழை பதிவாக கூடும்.

குறிப்பாக டிசம்பர் 3 ஆம் தேதி மற்றும் 4 தேதிகளில் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் அதி கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும், கடலோர ஆந்திராவிற்கு 4ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கடலோர ஆந்திராவில் வரும் 4ஆம் தேதி அதி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாக கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.