உணவுப் பாதுகாப்பு குறியீடு விருதுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இதில், தமிழகம் முதலிடம் பெற்று விருதை தட்டிச் சென்றது. இந்தப் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்தது. ஆண்டுதோறும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உணவுப் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டு விருது வழங்கி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
5 முறைகளில் தர அளவீடு செய்யப்பட்டு இந்த புள்ளிகள் வழங்கப்படுகிறது. மனித வளம், நிறுவனத் தரவுகள், இணக்கம், உணவு சோதனை கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன், நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை மதிப்பீடு செய்து புள்ளிகள் வழங்கப்படுகிறது.
இதனை மதிப்பீடு செய்து இந்திய உணவுப் பாதுகாப்பு தர ஆணையம் புள்ளிகளை வழங்கி மாநிலங்களைத் தேர்வு செய்கிறது.
அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள பெரிய மாநிலங்களின் இந்தப் பட்டியலில் 82 புள்ளிகள் பெற்று தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத் மாநிலம் 77.5 புள்ளிகளுடன் உள்ளது. மூன்றாவது இடத்தில் 70 புள்ளிகளுடன் மகாராஷ்டிரா உள்ளது.
கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் 72 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இருந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே கேரளாவும், தமிழ்நாடும் பெற்றிருந்தன.
இந்த ஆண்டு ஆந்திரப் பிரதேசம் 26 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. தெலங்கானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களும் கடைசி மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன.
கோவா முதலிடம்!
குறைந்த மாநிலங்களின் பிரிவில், கோவா முதலிடத்திலும், அதற்கு அடுத்தடுத்து மணிப்பூர், சிக்கிம் ஆகிய மாநிலங்களும் உள்ளன. இந்தப் பிரிவில் அருணாசலப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.
யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை ஜம்மு-காஷ்மீர் 68.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 66 புள்ளிகளுடன் டெல்லி இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் சண்டீகரும் உள்ளது.
உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் லடாக் ஆகியவை இந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. “நாட்டு மக்கள் உட்கொள்ளும் உணவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது” என்று சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
உலக உணவுப் பாதுகாப்பு தினத்தில் (ஜூன் 7) விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்