உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க அரசு மருத்துவமனையில் ரூ.50 ஆயிரம் கேட்டதை அடுத்து, பணம் இல்லாததால் பெற்றோர் பிச்சை எடுத்துள்ளனர்.
பிகாரில் உள்ள சமஸ்திபூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சமஸ்திபூரைச் சேர்ந்த மகேஷ் தாக்கூர் என்பவரின் மகன், கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் மகனை தேடி வந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த நிலையில் மகேஷ் தாக்கூரின் மகனின் உடல் அரசு மருத்துவமனையில் இருப்பதாக அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பெற்றோர், மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளனர். பின்னர், மகனின் உடலை பெற்றுச் செல்ல கோரி உள்ளனர்.
அதற்கு அங்குள்ள ஊழியர்கள் ரூ.50 ஆயிரம் கொடுத்தால்தான் உடலை ஒப்படைப்போம் என கூறியுள்ளனர்.
பணம் கொடுக்க வசதி இல்லாததால், மருத்துவமனையை விட்டு வெளியே வந்த மகேஷ் தாக்கூரும் அவரது மனைவியும் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, மகேஷ் தாகூரை அழைத்த மருத்துவமனை நிர்வாகம், அவரது மகனின் உடலை ஒப்படைத்துள்ளனர்.
இது கொடூரமான, மனித தன்மையற்ற செயல் என தெரிவித்த மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் எஸ்.கே. சவுத்ரி, லஞ்சம் கேட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இந்த மருத்துவமனையில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் என்றும், அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படாததால் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.









