இந்திய நாட்டின் மற்ற மாநிலங்களைப் போல், தமிழ்நாட்டிலும் கடந்த வாரம் மீண்டும் அனல் கக்கியது மின் வெட்டு .இந்த மின்வெட்டு விரைவில் சரியாகும், தமிழ்நாடு மீண்டும் ஒளிமயமான மின்மிகை மாநிலமாக மாறுமா ? அதைப்பார்க்கலாம்.
சென்ற வாரம் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. மாநிலத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. மின் தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம் என அரசு அதிகாரிகளிடமும், நிபுணர்களிடமும் உரையாடியபோது, தற்போதைய மின் தட்டுப்பாடு தற்காலிகமானதே, வரும் வாரங்களில் நிலைமை சீராகி, ஒளிமயமான மின்மிகை மாநிலமாக மீண்டும் தமிழ்நாடு பயணிக்கும் வாய்ப்புள்ளது என கூறி சில தரவுகளை தந்துள்ளனர்.
கொளுத்தும் கோடை வெயில் ஒரு புறம் என்றால் , தன்பங்குக்கு மின் வெட்டும் ஒருபுறம் என பெரும்பாலான மக்களை வாட்டி வதக்கி வருகிறது .மின்வெட்டின் அகோர முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. எங்கும் நீக்கமற நிறைந்துள்ள மின் விசிறிகளும், குளிர்விப்பான்களும் ஓய்வெடுத்துக்கொண்டன. தற்போது இந்தியா முழுவதும் மின் தட்டுப்பாடு இருந்தாலும், மின் உற்பத்தியில் தன்னிறைவை கண்டு , மின் மிகை மாநிலமான தமிழ்நாட்டிற்கு மின் தட்டுப்பாடு பேரதிர்ச்சியே.
தமிழ்நாட்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாகவும், மத்திய அரசு நிறுவனங்களான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மற்றும் தேசிய அனல் மின் கழகம் உடன் இணைந்தும் மின் உற்பத்தியை செய்து வருகின்றன. மேட்டூர், பவானிசாகர், குந்தா, கைகா போன்ற இடங்களில் நீர் மின் நிலையங்கள் மின் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட பருவ காலங்களில் கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலை கழிவுகளில் இருந்து இணை மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் தாவர கழிவுகள், இயற்கை எரிவாயுக்களில் இருந்தும் மினுற்பத்தி நடைபெறுகிறது. இந்திய அளவில் தமிழ்நாட்டில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி திறன் சுமார் 10 ஆயிரம் மெகாவாட். சூரிய ஒளி மின்சார உற்பத்தியும் தமிழ்நாட்டில் சூடுபிடித்து வருகிறது. அத்துடன் கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் அனுமின் உலைகளிலிருந்தும் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
அரசு, தனியார், மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுடன் இணைந்து என கணக்கிட்டால் தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் முப்பதாயிரம் மெகாவாட்டாக உள்ளது . காற்றாலை பருவகாலங்களை தவிர்த்து பார்த்தால் சாதாரண காலங்களில் தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தி கொள்முதலும் சேர்த்து, சராசரியாக 15000 மெகாவாட். தேவையும் ஏறக்குறைய 15000 மெகாவாட். ஆனால் கோடைகாலம் மற்றும் சில நேரங்களில், அதிக பட்ச தேவையானது சில நேரங்களில் 17000 மெகாவட்டாக உள்ளது.

அப்போது பற்றாக்குறை 2000 மெகாவாட். அதை வெளி மாநிலங்களிலிருந்து பெறுகிறது தமிழ்நாடு மின்சார வாரியம். காற்றாலை மூலம் அதிக அளவில் மின் உற்பத்தி நடைபெறும் போதும், மின் தேவை குறைவான குளிர்காலம் மற்றும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் உற்பத்தியாகும் கூடுதல் மின்சாரமானது மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் மத்திய தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் 750 முதல் 1500 மெகாவாட் மின்சாரமும் எந்த வித முன்னறிப்பின்றி திடீரென நின்று போனது. இதனால் அதிக அளவு நகர்மயமான மற்றும் தொழில்மயமான தமிழ்நாட்டின் சீரான இயக்கத்தில் தொய்வு கண்டது.
மின் தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம் என பார்க்கும் போது, மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி பற்றாக்குறையே முக்கிய காரணம் என தெரிந்தது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு அரசின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் 50,000 மெட்ரிக் டன் நிலக்கரி மட்டுமே இந்திய அரசால் விநியோகம் செய்யப்படுகிறது. அதனால் நாள்தோறும் நிலக்கரி பற்றாக்குறை 22,000 மெட்ரிக் டன்னாக உள்ளது. மாதம் ஒன்றிற்கு 6.6 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மற்றொரு தடைக்கல்லாக நிலக்கரி சுரங்கங்களிலிருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ரயில் வேகன்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. சீரான நிலக்கரி வினியோகத்திற்கு கூடுதல் ரயில்வே வேகன்களை இயக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் அதிக தொழில் மயமான மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் உள்ளன. மூன்று மாநிலங்களிலும் நிலக்கரி பற்றாக்குறையால் ,மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா, குஜராத் மாநில அரசுகளைப் போல் தமிழ்நாடும் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து 10 லட்சம் டன் அளவிற்கு நிலக்கரியை அடுத்து வரும் நாட்களில் இறக்குமதி செய்ய உள்ளது.குறிப்பிடதக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

தனியார் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்கும் மின்சாரம் சாதாரண நேரங்களில் ஒரு யூனிட் 4 முதல் 5 ரூபாய் வரை உள்ளது. அதே சமயம் மிக அதிகபட்ச தேவை உள்ள நேரங்களில் ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய் விலையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் 3 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் போது வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரவும், நம்முடைய மின் உற்பத்தி அதிகமாகும் போது மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு தேவையான மின் உள்கட்டமைப்பில் தமிழ்நாடு இணைந்துள்ளது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரிலிருந்து – தமிழ்நாட்டின் புகளூர் வரையிலும் பின் கேரளாவின் திருச்சூர் வரையிலான ,1850 கி.மீ தூரம் கொண்ட உயர் அழுத்த நேரடி மின் இணைப்பு பாதை தமிழ்நாட்டின் மின் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது . இந்த மின் வழித்தடம் மூலம் 8 கோடி மக்கள் பயனடைகின்றனர்.
வரும் வாரங்களில் செம்மையாகும் சீரான நிலக்கரி விநியோகமும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரியும், அத்துடன் காற்றாலைகளும் கைகோர்க்கும் போது , மின்னுற்பத்தி அதிகமாகி , மீண்டும் தமிழ்நாடு ஒளிமயமான மின் மிகை மாநிலமாக மாறும் என்பதே மின் துறை நிபுணர்களின் நம்பிக்கையாக உள்ளது.
- தங்கபாண்டியன்







