முக்கியச் செய்திகள் தமிழகம்

கடலூர் மாவட்டத்தில் வரும் 11-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம்- அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்யும் என்எல்சி மற்றும் தமிழ்நாடு அரசின் அடக்கு முறையை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11ம் தேதி பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலனை விட என்.எல்.சி நிறுவனத்தின் வணிக நலனே முக்கியம் என்பதை தமிழ்நாடு அரசும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன. கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் பொதுமக்களை சிறைப்படுத்திவிட்டு, காவல் துறையினரை குவித்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும்: புதுச்சேரியில் தனிநபர் வருமானம் உயர்வு- ஆளுநர் உரையில் தமிழிசை தகவல்

கடலூர் மாவட்டத்தையும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலையும் பாழ்படுத்தி வரும் என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் கையகப்படுத்தித் தரும் முகவராக தமிழ்நாடு அரசும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டு வருகின்றன. மக்களைக் காப்பது தான் அரசின் முதற்கடமை என்பதை மறந்து விட்டு, என்.எல்.சி நிறுவனத்தின் கையசைவுக்கு ஏற்றவாறு தமிழக அரசு செயல்படுவதை பாமக கடுமையாக கண்டித்து வருகிறது.

கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் 2006ம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப் பட்ட நிலங்கள் இன்னும் உழவர்களின் பயன்பாட்டில் தான் உள்ளன. அவற்றை என்.எல்.சி நிர்வாகத்திற்கு விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் உழவர்களும், பொதுமக்களும் உறுதியாக உள்ளனர். ஆனால், அவர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காத என்.எல்.சி நிறுவனம், இன்று தமிழ்நாடு அரசு உதவியுடன் அந்த நிலங்களை சமன்படுத்தி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பணியைத் தொடங்கியுள்ளது.

என்.எல்.சி நிறுவனத்தின் இந்த அத்துமீறலுக்கு துணை போகும் வகையில் கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் தலைமையில் 1000-க்கும் கூடுதலான காவலர்களை தமிழ்நாடு அரசு குவித்திருக்கிறது. நிலங்களை சமன்படுத்தும் பணி நடைபெறும் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் யாரும் நுழையாதவாறு தடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு சிறைபடுத்தப்பட்டு உள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் வஜ்ரா ஊர்திகளையும், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் ஊர்திகளையும் தமிழக அரசு நிறுத்தியிருக்கிறது. இவ்வளவையும் செய்வதன் மூலம் கடலூர் மாவட்ட நிர்வாகம் மக்களுக்கான அமைப்பு அல்ல. என்.எல்.சி நிறுவனத்தின் நலன் காக்கும் அமைப்பு என்பது ஐயமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி நிறுவனத்தின் அத்துமீறலை தடுக்கும் நோக்கத்துடன் பொதுமக்களுக்கு ஆதரவாக களத்திற்கு சென்ற பாமகவின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே. கணேசன் ஆகியோர் தான் மக்களுக்கும், உழவர்களுக்கும் எதிரான அடக்குமுறைகளை தலைமையேற்று நடத்துகின்றனர். இதன்மூலம் வாக்களித்த மக்களுக்கு மன்னிக்க முடியாத பெருந்துரோகத்தை இழைத்துள்ளனர்.என்.எல்.சி மற்றும் தமிழ்நாடு அரசின் அடக்குமுறைகளுக்கு பாமகவும், பொதுமக்களும் அஞ்ச மாட்டார்கள். என்.எல்.சி நிறுவனத்தை கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேற்றி, உழவர்களைக் காக்கும் வரை பாமகவின் போராட்டம் தொடரும். உழவர்களின் நிலங்களை சமன்படுத்தி கட்டுப்பாட்டில் எடுக்கும் என்.எல்.சி மற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாமக சார்பில் வரும் 11ம் தேதி கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் இந்த அறவழிப் போராட்டம் நடத்தப்படும். மண்ணைக் காப்பதற்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் கேட்டு கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நண்பரின் வீட்டில் திருடிய கல்லூரி மாணவர்; நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்

Web Editor

அமெரிக்க ஓபன் டென்னிஸ்-வெளியேறினார் ரபேல் நடால்

Web Editor

எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம்; எடப்பாடி பழனிசாமி மரியாதை

Jayasheeba