புதுச்சேரியில் தனிநபர் வருமானம் ரூ.2.22லட்சமாக உயர்ந்துள்ளதாக பட்ஜெட் கூட்டத்தொடர் உரையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் 2023-24ம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. முன்னதாக சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் தமிழிசை காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து சபாநாயகர் செல்வம் பூங்கொத்து கொடுத்து துணைநிலை ஆளுநரை வரவேற்று பேரவைக்குஅழைத்து சென்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் பாரதியாரின் பாடல் வரிகளுடன் தனது உரையை தமிழிசை சௌந்தரராஜன் வாசித்தார். அதில், இந்தியா ஜி 20 மாநாட்டுக்கு தலைமையேற்று நாடு முழுவதும் 200 கூட்டங்கள் நடத்த முடிவு எடுத்து புதுச்சேரியில் முதல் கூட்டம் நடந்தது நமக்கு பெருமை
சேர்த்துள்ளது. புதுச்சேரி அரசு நிதி நிர்வாகத்தை சிறப்பாக கையாண்டதால் ரூ.1400 கோடி நிதி மத்திய அரசால் வழங்கபபட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு ரூ.11,500 கோடி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையும் படிக்கவும்: புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் 14 நாட்கள் நடைபெறும்- சபாநாயகர் செல்வம்
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளவர்களின் தனிநபர் வருமானம் 2021-22ல் ரூ. 2.14 லட்சத்திலிருந்து 2022-23 ல் ரூ.2.22லட்சமாக உயர்ந்துள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசு சார்பில் இடுபொருள் தரப்படுவதாக கூறினார்.இதனிடையே ஆளுநர் பேரவையில் உரையாற்றி கொண்டிருந்த போது முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு எழுந்து நின்று கையில் இருந்த பதாகையை காண்பித்தார். அதில், “மத்திய அரசே புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநர் நியமித்திடு, வேண்டாம் வேண்டாம் இரவல் ஆளுநர் வேண்டாம்” என்று எழுதியிருந்தது. அதை பார்த்த பேரவைத் தலைவர் செல்வம் அமர கூறினார். ஆனால் அவர் இருக்கையில் அமராமல் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே ஆளுநர் தனது இறுதி கட்ட உரையை வாசித்து கொண்டு இருந்தபோது திடீரென தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுது நேரம் தனது உரையை நிறுத்திய ஆளுநர் தொடர்ந்து தனது உரையை முடித்து விட்டு பேரவையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து பேரவையில் பேசிய சபாநாயகர் செல்வம், ஆளுநர் உரையின் போது பதாகைகளை கையில் ஏந்த கூடாது என ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் உரையின் போது பதாகைகள் கையில்
ஏந்திய சட்டமன்ற உறுப்பினர் நேருவிடம் விளக்கம் கேட்டு பின்னர் நடவடிக்கை
எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேரவை நிகழ்வுகளை நாளை காலை 9.30
மணி வரை ஒத்தி வைத்து சபாநாயகர் செல்வம் அறிவித்தார் .