சமத்துவத்தை நிலை நாட்டும் தமிழ் திரைப்பட பாடல்கள்

தமிழ் திரைப்பட பாடல்கள் பேசாத தர்மமில்லை, பொருளில்லை. அருகி வரும் சமத்துவத்தை, என்றும் நிலை நாட்டும் வகையில் இடம்பெற்ற சில பாடல்களை காணலாம் வாருங்கள்… பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்…

தமிழ் திரைப்பட பாடல்கள் பேசாத தர்மமில்லை, பொருளில்லை. அருகி வரும் சமத்துவத்தை, என்றும் நிலை நாட்டும் வகையில் இடம்பெற்ற சில பாடல்களை காணலாம் வாருங்கள்…

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்கிறார் வள்ளுவன். அதாவது பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டும் திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும் என விளக்கம் தருகிறார் கலைஞர் கருணாநிதி. இறைவன் பொதுவாக படைத்ததை ஒருசிலர் உரிமையாக்கிக் கொண்டதாக கூறும் கவியரசு கண்ணதாசன், படைத்தவன் சேர்த்து தந்தான், வளர்த்தவன் பிரித்து வைத்தான் என்கிறார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என கணியன் பூங்குன்றனாரும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திருமூலரும், அலகிலா விளையாட்டுடையாரவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே என கம்பரும் குறிப்பிடுகின்றனர். அனைவரும் ஒன்றே என பெரும்புலவர்கள் கூறிய கருத்தை, பாவமன்னிப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற, வந்த நாள் முதல் பாடலில், பாரில் இயற்கை படைத்ததை எல்லாம் பாவி மனிதன் பிரித்து வைத்தானே என குறிப்பிட்டிருப்பார் கவியரசர்.

இறைவன் குறித்த உண்மையை, ஓரிறைக் கோட்பாடு, சமரச வாழ்வு, ஒற்றுமை உணர்வை ஒருங்கிணைத்து ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம் என ஒருங்கிணைத்து பாடுகிறார் கவியரசு கண்ணதாசன்.

பாவி மனிதன் பிரித்து வைத்தானே என்றார் கண்ணதாசன். அந்த வரிகளின் உண்மைக்கு சற்றும் குறையாமல் உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று, ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை என அற்புதமான வரிகளை தந்துள்ளார் கவிஞர் வாலி. கவிபாடிய பெரும் புலவர்கள் தந்த கருத்தை, காதால் கேட்டு கம் என செல்வதைவிட, கருத்தால் கடைபிடித்து வாழ்வதே கர்மமென கொள்வோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.