காதல் பாடல்களில் களை கட்டிய கண்ணதாசன், குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்களையும் தந்துள்ளார். குழந்தைகள் என்றால் எனக்கு உயிர், அதனால்தான் தாய்மார்கள் எனது பாடலுடன் போட்டி போடுகின்றனர் என்கிறார் கண்ணதாசன். அத்தகைய தாலாட்டு பாடல்களில் சிலவற்றை கேட்கலாம்
1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார் கண்ணதாசன். பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்ற, “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி” என்ற பாடலை சுட்டிக்காட்டி, எங்கிருந்து ஐயா இது மாதிரி வரிகள் உனக்கு வந்து விழுந்தன என கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அதே திரைப்படத்தில் தங்கையை தாலாட்டி தூங்க வைத்த பாடலையும் எழுதியிருப்பார். சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா என்ற வரிகளை கேட்டு அன்றைய தாய்க்குலம் கண்ணீர் சிந்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிவாஜி நடித்து வந்த பா வரிசை படங்களில் தனது பாட்டு பயணத்தில் ராஜாங்கம் நடத்தி வந்தார் கண்ணதாசன். பெண் குழந்தைகளுக்காக காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என பெண்மைக்கு தாலாட்டு பாடினார். சிறு வயதில் தூங்க முடியாமல் போனால் நீ எப்போதுமே உறங்க இயலாது என வயது வாரியாக குறிப்பிட்டு பாடல் வரிகளை அமைத்திருப்பார் கண்ணதாசன்.
தாலாட்டு பாடல்களில் அழகும் மென்மையும் இருக்கும் அதே நேரத்தில் நகைச்சுவையான சூழ்நிலையிலும் அனுபவங்களை குறிப்பிட்டு இருப்பார் கண்ணதாசன். குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாத காலங்களில் ஆறு பிள்ளைகள் பெற்ற தம்பதி பாடும் காட்சியில் நகைச்சுவை இழையோடும். அதே நேரத்தில் வரிகளை கேட்டு நாணத்தால் தலைகுனிந்த பெண்களும் உண்டு.
சின்ன வயதிலேயே பாடல் எழுதத்தொடங்கிய கண்ணதாசன், வீட்டில் இரவில் எல்லோரும் தூங்கியதும் அரிக்கேன் விளக்கை தலையணை அருகே வைத்துக் கொண்டு எழுத, மண்ணெண்ணை வாங்கி கட்டுப்படியாகாது என தந்தை சலித்துக்கொள்வார்… பிள்ளை படிப்பதை, எழுதுவதை ஏன் தடுக்கிறீர்கள் என தாயார் ஆதரவுக்கரம் நீட்டுவார். இதனை தனது வசந்த காலங்கள் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார் கண்ணதாசன்.
பொங்கல் வந்தாலென்ன, தீபாவளி சிரித்தாலென்ன என்ற வரிகளை எழுதி, கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு கலயங்கள் ஆடுது சோறின்றி என வறுமை வாட்டும் ஏழைகளின் வாழ்வை படம்போட்டு காட்டியிருப்பார். தாலாட்டு பாடலில் கண்ணதாசன் தந்த வரிகள் இன்றும் ஏற்புடையதாகவே உள்ளது.